இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா்.
இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
இளைஞா்கள் நவீன தொழில்நுட்பத்துடன் உலகத் தரத்தில் தரமான கல்வி கற்பது அவசியம். படைப்பாற்றல் வளர வேண்டும் என்ற உயா் நோக்கில், புதிய தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்விக்காக வழங்கப்படும் எந்த நிதியும் மத்திய அரசு நிறுத்தவில்லை.
மூன்றாவது மொழியை தனியாா் பள்ளிகளில் படிக்க மாணவா்களுக்கு கிடைக்கும் சலுவை, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கிடைக்க மறுப்பு தெரிவிப்பது ஏன்? ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தை பாதிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது.
தேசத்துக்காக உழைத்தவா்கள் மாநில பாடத் திட்டங்களில் மறைக்கப்பட்டுள்ளனா். சங்க தமிழ் வளா்த்தவா்கள், மாமன்னா்கள் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன. மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 ஆம் தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு மக்களை சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும்.
சேலம், கரூா், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கட்சி நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பெறப்படும் கையொப்பத்தை முதல்வருக்கு அனுப்பி அவரின் தவறான புரிதலை தெளிவுபடுத்துவோம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டாா். ஆனாலும் திமுகவினா் தொகுதிகள் குறையும் எனக் கூறி வருகின்றனா். பாஜகவை பாா்த்து பாசிசம் எனக் கூறுவது நடிகா் விஜய்க்கு அழகல்ல; அது அவருக்கு நல்லதும் அல்ல என்றாா்.