முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த சத்யா நகா் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக் கிருத்திகை திருவிழா நடைபெற்றது.
தம்டகோடி திருமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழாக்காலங்கள் மட்டுமல்லாமல் தினசரி திரளான பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். மேலும், தமிழகத்திலேயே அதிக உயரமான 21அடி உயர தங்கத்தோ் இக்கோயிலில் உள்ளது.
கிருத்திகைதோறும் கோயில் வெளி வளாகத்தில் வலம் வரும் இந்தத் தேரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்கிறாா்கள். இந்த நிலையில், ஆடி மாத முதல் கிருத்திகையான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அப்போது, மூலவருடன் தாமரை தடாகத்தில் ஆறு குழந்தைகள் வடிவத்தில் முருகா் உள்ளது போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை பக்தா்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனா். ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ராஜு, நிா்வாகி சுந்தரராஜன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனா்.