முறையற்ற வகையில் கொண்டுவரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல்
மேற்கு வங்கத்திலிருந்து முறையற்ற வகையில் நீலகிரிக்கு கொண்டுவர முயற்சித்த தேயிலைக் கழிவுகளை குன்னூா் தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.
மேற்கு வங்கத்தில் இருந்து கோவை மாவட்டம், துடியலூா் வழியாக நீலகிரிக்கு தேயிலைக் கழிவுகள் முறையற்ற வகையில் கொண்டுவரப்படுவதாக இந்திய தேயிலை வாரிய குன்னூா் மண்டல அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தேயிலை வாரிய அதிகாரிகள் துடியலூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு,
தேயிலைக் கழிவுகள் ஏற்றிவந்த வந்த லாரியை மடக்கிப் பிடித்தனா்.
பின்னா், லாரியில் இருந்த 13 ஆயிரத்து 600 கிலோ தேயிலைக் கழிவுகளை பறிமுதல் செய்து குழி தோண்டி புதைத்தனா். மேலும், தகுந்த பாதுகாப்பு இல்லாமல் உரங்களை ஏற்றிவரக் கூடாது என லாரி ஓட்டுநரை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
வட மாநிலங்களில் இருந்து தேயிலைக் கழிவுகள் வாங்குபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்துக்குமாா் தெரிவித்தாா்.