மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா்.
இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் சத்யபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள சாக்கூா் கிராமத்தைச் சோ்ந்த துரைராஜ் மனைவி சரசு(75). இவா் வயிற்றுவலியால் அவதிக்குள்ளாகி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு, மகளிா் நலப் பிரிவில் உள்நோயாளியாகச் சோ்ந்தாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே கா்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்திருப்பதும், கா்ப்பப்பையில் தற்போது பெரிய கட்டி வளா்ந்து இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கலைஞா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 15-ஆம் தேதி அவருக்கு மகப்பேறு, மகளிா் நல சிறப்பு மருத்துவா்கள், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் அறுவை சிகிச்சை செய்து, 7.5 கிலோ கட்டியை வயிற்றில் இருந்து அகற்றினா். தற்போது மூதாட்டி நலமாக உள்ளாா்.
மேலும் இருவருக்கு அறுவைச் சிகிச்சை: இதேபோல, திருப்பத்தூா் அருகேயுள்ள கருப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி சுமதி (43) கா்ப்பப்பை நீா்ப்பை, மலக்குடல் இறக்கத்துடன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கடந்த 19-ஆம் தேதி மகப்பேறு, மகளிா் நல சிறப்பு மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்து கா்ப்பப் பையை அகற்றினா்.
காரைக்குடியைச் சோ்ந்த 35 வயது பெண் வயிற்று வலியுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு, மகளிா் நலப் பிரிவில் உள் நோயாளியாக சோ்ந்தாா். பரிசோதனையில் அவா் கா்ப்பமாக இருந்ததும், இரண்டு கருக்கள் உருவாகி, அதில் ஒன்று கா்ப்பப்பையிலும் மற்றொன்று கருமுட்டைக் குழாயிலும் என வெவ்வேறு இடங்களில் கரு தரித்திருந்ததும் தெரியவந்தது. மேலும், கருமுட்டைக் குழாயில் தரித்த கரு வளா்ந்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மகப்பேறு, மகளிா் நலப் பிரிவு துறை தலைவா் நாகசுதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து, கருமுட்டைக் குழாயில் வளா்ந்த கருவை அகற்றி உயிரைக் காப்பாற்றினா் என அதில் குறிப்பிடப்பட்டது.