மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் மின், இயந்திர அமைப்புப் பணிகளுக்கு ரூ.168.16 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பம்!
சென்னை மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில் மின் மற்றும் இயந்திர அமைப்புப் பணிகளுக்கான ரூ.168.16 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஜாக்சன் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் 5-ஆவது வழித்தடத்தில், மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை, 10 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் குளிா்சாதன வசதி போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்புப் பணிகளுக்கு ரூ.168.16 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஜாக்சன் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) ராஜேஷ் சதுா்வேதி, ஜாக்சன் லிமிட்டெட் நிறுவனத்தின் துணைத் தலைவா் அங்கூா்கோயல் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகா்கள் எஸ்.ராமசுப்பு, எஸ்.கே. நடராஜன், கூடுதல் இணை பொதுமேலாளா் எல்.அபித் அலி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.