மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை..! ரியல் மாட்ரிட் வெற்றி!
சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே 50 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன் லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் கிளியன் எம்பாப்பே சில மாதங்களாக ஸ்கோர் செய்ய முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அட்லாண்டா உடனானா போட்டியில் 10ஆவது நிமிஷத்தில் அசத்தலாக கோல் அடித்தார். அவர் கொண்டாடிய விதம் அவரது ரசிகர்களுக்கு குதூகலத்தை அளித்தது. ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
காயம் காரணமாக எம்பாப்பே போட்டியில் இருந்து வெளியேறினார். பின்னர் வினிசியஸ் ஜூனியர், ஜூட் பெல்லிக்ஹாம் கோல் அடித்து அசத்த ரியல் மாட்ரிட் 3-2 என வென்றது.
மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை
இந்த கோலின் மூலம் கிளியன் எம்பாப்பே சாம்பியன் லீக்கில் தனது 50ஆவது கோலை இளம் வயதில் நிறைவு செய்துள்ளார். 25 ஆண்டு 356 நாள்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு லயோனல் மெஸ்ஸி 24 ஆண்டு 284 நாள்களில் 50 கோல்கள் அடித்ததே முதல் இடத்தில் இருக்கிறது.
எம்பாப்பே 79 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மெஸ்ஸி 66 போட்டிகளிலும் ரூட் வன் நிஸ்டெல்ரோய் 62 போட்டிகளிலும் லெவண்டாவ்ஸ்கி 77 போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் லீக்கில் அதிகபட்சமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 140 கோல்கள் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் மெஸ்ஸி 129 கோல்களுடன் இருக்கிறார்.
இந்த இருவரும் தற்போது சாம்பியன் லீக்கில் விளையாடுவதில்லை என்பதால் எம்பாப்பேவுக்கு இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் அணி முதலிடத்திலும் ரியல் மாட்ரிட் அணி 18ஆவது இடத்திலும் இருக்கின்றன.
15 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு இந்த சீசனில் இது 3ஆவது வெற்றியாகும்.இந்த சீசனில் சுமாரன செயல்பாடுகளை வழங்கிவரும் ரியல் மாட்ரிட் அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக இருக்கும்.
கிளியன் எம்பாப்பே காயம் பெரியதாக இல்லை. விரைவில் குணமடைந்துவிடுவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.