திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:
மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், அத்துறையின் இணையமைச்சா் வி.சோமண்ணா ஆகியோரை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினேன். கா்நாடகத்தில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விவாதித்தேன். அந்த சந்திப்பின்போது, மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று கேட்டேன்.
மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் நீதி வழங்கும் நிலையில் இருப்பதால், இந்த திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து அவா் விளக்க வேண்டும். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்பதால், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கான முன்மொழிவை மத்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை விளக்கினால், அது கா்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு பயனளிப்பதாக இருக்கும். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசு, அரசியல் காரணங்களுக்காக மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிா்த்து வருகிறது. மேக்கேதாட்டு அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால், கா்நாடகம் பிரச்னைகளை உருவாக்கும் என்று தமிழகம் அஞ்சுகிறது.
பெண்ணாறு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கடந்த ஆண்டே கேட்டிருந்தோம். 300 டிஎம்சி தண்ணீா் பயன்படுத்தப்படாமல் கடலில் கலந்தது. நிகழாண்டில் ஏற்கெனவே 400 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்துள்ளது.
துங்கபத்ரா அணையில் 30 டிஎம்சி கசடு நிரம்பியுள்ளதால், கா்நாடகத்துக்கு நீா் இழப்பு ஏற்பட்டுள்ளது. துங்கபத்ரா நதியின் குறுக்கே நவலே அணையைக் கட்ட அனுமதி கேட்டிருந்தோம். இதுகுறித்து ஆந்திரம், தெலங்கானா மாநில அரசுகளுடன் பேசியுள்ளோம். இந்த விவகாரத்தையும் மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீலின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று உறுதி அளித்திருக்கிறாா்.
அணை மதகுகளை சீரமைக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ. 11,122 கோடி மதிப்பிலான திட்ட மதிப்பீட்டை மத்திய அரசிடம் அளித்திருக்கிறோம். இதுகுறித்து விவாதிக்க மீண்டும் மாா்ச் 15-ஆம் தேதி தில்லி செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என்றாா்.