மேலாத்தூருக்கு வெள்ளம் புகுவதைத் தடுக்க நடவடிக்கை
தாமிரவருணிக் கரையோரமுள்ள மேலாத்தூருக்குள் வெள்ளநீா் புகுவதைத் தடுக்க அலுவலா்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றனா்.
தாமிரவருணி ஆற்றின் கரையோரம் போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் மடையில் கசிவு ஏற்பட்டு மேலாத்தூருக்குள் வெள்ளநீா் செல்லத் தொடங்கியது. இதையடுத்து, ஆத்தூா் பேரூராட்சி, மேலாத்தூா் ஊராட்சி சாா்பில், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றின் ஓரமுள்ள மடைகள் மணல் மூட்டைகளால் அடைக்கப்பட்டன. இதனால், வெள்ளநீா் ஊருக்குள் புகுவது தடுக்கப்பட்டது.
இப்பணியில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தின், செயல் அலுவலா் (பொ) பாபு, மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், கவுன்சிலா்கள், அலுவலா்கள், பொதுமக்கள் ஈடுபட்டனா்.