மோசமான வானிலை: சென்னையில் 13 விமானங்கள் ரத்து
சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க |திருவண்ணாமலை தீபம்: சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை(டிச.11) ஒரே நாளில் 7 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் என மொத்தம் 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து சென்னை வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறக்க முடியாததால், பெங்களூருவுக்கு திரும்பி அனுப்பப்பட்டது.
தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னை-தில்லி, மங்களூரு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.