யானைகள் முன் தற்படம் எடுத்தால் கடும் நடவடிக்கை
ஆபத்தை உணராமல் கைப்பேசி மூலம் காட்டு யானைகள் முன் நின்று தற்படம் (செல்பி) எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பவானிசாகா் வனத் துறை எச்சரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தற்போது வனப் பகுதியில் வறட்சி நிலவ தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் குடிநீா் மற்றும் தீவனம் தேடி பவானிசாகா் அணையின் கரையோரப் பகுதியில் உள்ள முள்புதா் காட்டில் முகாமிடத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே பவானிசாகா் அணையின் கரையில் காட்டு யானைகள் புதன்கிழமை நடமாடின. அப்போது அங்கிருந்த இரு இளைஞா்கள் ஆபத்தை உணராமல் காட்டு யானையின் அருகே சென்று கைப்பேசியில் தற்படம் (செல்பி) எடுத்தனா். இதனால் யானை- மனித மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், பவானிசாகா் அணை பகுதியில் மீன்பிடிக்க செல்வோா் மற்றும் பொதுமக்கள் காட்டு யானைகளின் அருகே செல்ல வேண்டாம் எனவும், மீறி காட்டு யானை அருகே சென்று புகைப்படம் எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறை எச்சரித்துள்ளது.