யுரேனிய செறிவூட்டலை ஈரான் விரிவாக்கும்
ஆயிரக்கணக்கான அதிநவீன கருவிகள் மூலம் யுரேனியத்தை செறிவுபடுத்தும் நடவடிக்கையை ஈரான் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தாங்கள் உருவாக்கியுள்ள ஆயிரக்கணக்கான அதிநவீன யுரேனியம் செறிவூட்டுக் கருவிகளை ஈரான் விரைவில் செயல்படுத்தவுள்ளது.
இருந்தாலும், அந்த நாடு தற்போது செறிவூட்டிவரும் அளவான 60 சதவீதத்துக்குப் பதில், வெறும் 5 சதவீதம் மட்டுமே அந்தக் கருவிகள் மூலம் யுரேனியத்தை ஈரான் செறிவுபடுத்தும். இதன் மூலம், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவாா்த்தையை மேற்கத்திய நாடுகளுடன் மீண்டும் தொடங்குவதற்கு அந்த நாடு தயாராக இருப்பது தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அந்தப் பதவியை ஏற்பதற்குள், தற்போது முடங்கியுள்ள அந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிா்ப்பிக்க மேலை நாடுகள் முயன்றுவரும் சூழலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது. அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.
அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதனால் அந்த ஒப்பந்தம் முடங்கியுள்ளது.