வாக்கு எண்ணிக்கையில் மோசடி: நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றச்சாட்டு!
``ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால்... அவரை அருகில் உட்கார வைத்திருந்த நீங்கள் சொங்கியா?" - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததிலிருந்து விமர்சனங்களை எதிர்க்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதால், ரஜினி ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க ரஜினியை சந்தித்ததாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இந்த நிலையில், இன்று மதுராந்தகத்தில் 27-ம் தேதி நடக்கவிருக்கும் மாவீரர் பொதுக்குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ``ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாள் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு மாவீரர் நாள் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. எங்கள் முன்னோர்களைப் போற்றுகிற ஒரு நாள். ரஜினி ரசிகர்களை ஈர்க்கத்தான் ரஜினியை சந்தித்ததாக பேசுகிறார்கள். அது அப்படியல்ல... அது ஒரு அன்பான, மரியாதையான சந்திப்பு. தஞ்சாவூர் ஆசிரியை கொலை, ஓசூர் நீதிமன்ற வாசலில் வைத்து வெட்டப்பட்ட வக்கீல் என அனைத்தும் சமூகத்தின் சிந்தனையின் தாக்கம் தான். இந்த குற்றங்களில் ஈடுபட்டவர் மட்டும்தான் குற்றவாளியா அல்லது அதை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த அத்தனைப் பேரும் குற்றவாளியா...
அங்கு இருந்த சிலர் அந்தக் குற்றவாளியை நோக்கி கல்லை நோக்கி எறிந்திருந்தாலே அவர் அங்கிருந்து ஓடிச் சென்றிருப்பானே. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை சோதித்துப் பார்த்தால் அவர்கள் போதையில் இருந்திருப்பார்கள். சமூகமே குற்றச்சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல். சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை பாருங்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது அதானியை விமர்சித்துப் பேசினார்கள். அனால் சூரிய ஒளியின் மின் பூங்கா அமைப்பதில் இவர்களுக்கும் கூட்டு இருக்கிறது. அதானியுடன் இவர்கள் எல்லோருக்கும் தொடர்பு இருக்கிறது. அதானி தமிழ்நாட்டுக்கு வந்தபோது யாரை சந்தித்தார். மர்மப் புகைமாதிரி வந்துச் சென்றிருக்கிறார்.
2022 -23-ல் ஒர் ஆண்டில் மட்டும் ரேஷன் கடைகளிலிருந்து சிந்திய தானியங்களால் மட்டும் ரூ1,900 கோடி நஷ்டம் எனக் கணக்கு சொல்கிறார்கள். அது சிந்தியதா அல்லது எடுத்து விற்றதா? இப்படி சிந்துவதால் மட்டும் வீணடிக்கிறது என்றால், ஏழை எளிய மக்கள் குறித்து அரசு எப்படி சிந்திக்கிறது என்பதை பாருங்கள். உண்மையில் அரிசி சிந்திதான் அரசுக்கு நஷ்டம் என நம்புகிறீர்களா? எதற்கு ரேஷன் கடைவரை அந்த அரிசியைக் கொண்டு செல்ல வேண்டும். இப்படியே விற்றுவிடலாமே.
நான் ரஜினியை சந்தித்ததால் நாங்கள் இருவரும் சங்கி என்றால், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவரை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்த நீங்கள் சொங்கியா. என்னை பேசினால் நானும் கேள்வி கேட்பேனல்லவா?. எங்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் சேர்பவர்களை நாங்கள் தான் மரியாதையாக அனுப்பி வைக்கிறோம். அவர்கள் எங்களுக்காக உளவு பார்க்க சிலிப்பர் செல்லாக அனுப்பியிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...