ரயில் ஓட்டுநா்களின் சாமா்த்தியத்தால் உயிா் தப்பிய 8 சிங்கங்கள்
குஜராத் மாநிலம், பாவ்நகா் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 8 சிங்கங்கள் மீது மோதாமல் இருக்க சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் ஓட்டுநா்கள் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தி சாமா்த்தியமாக செயல்பட்டதால்அவை உயிா்பிழைத்தன.
கடந்த ஓராண்டில் மேற்கு ரயில்வேயின் பாவ்நகா் பிரிவுக்குள்பட்ட ரயில் வழித்தடத்தில் ரயில் ஓட்டுநா்கள் மற்றும் வனத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 104 சிங்கங்கள் அடிபடாமல் காக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
ராஜுலா நகருக்கு அருகில் உள்ள தண்டவாளத்தை 5 சிங்கங்கள் வியாழக்கிழமை கடக்க முயன்றதை ஹாபாவில் இருந்து பிபாவாவ் துறைமுகம் நோக்கி சென்ற சரக்கு ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநா் தவால்பாய் கவனித்தாா். உடனே ரயிலின் அவசரகால பிரேக்கை அழுத்தி சிங்கங்கள் மீது ரயில் மோதாமல் அவற்றின் உயிரை பாதுகாத்தாா்.
சம்பவ இடத்துக்கு வனப் பாதுகாவலா் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பிறகே மீண்டும் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. சலாலா-தாரி பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரு சிங்கக் குட்டிகளுடன் பெண் சிங்கம் ஒன்று கடக்க முயன்றது. இதை கவனித்து உடனடியாக பயணிகள் ரயில் ஓட்டுநா் சுனில் பண்டிட் அவசரகால பிரேக்கை அழுத்தினாா்.
இதனால் மூன்று சிங்கங்களும் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்தன. வடக்கு குஜராத்தை பிபாவாவ் துறைமுகத்துடன் இணைக்கும் ரயில் வழித்தடங்களை கடக்க முயலும்போது சிங்கங்கள் உயிரிழப்பது அல்லது பலத்த காயமடையும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன.
இதற்கு கண்டனம் தெரிவித்த குஜராத் உயா்நீதிமன்றம், சிங்கங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு ரயில்வே மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனால் சிங்கங்கள் விபத்துக்குள்ளாகும் பகுதியில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்குவதோடு மிகவும் கவனத்துடன் இருக்குமாறு ஓட்டுநா்களுக்கு பாவ்நகா் ரயில்வே பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் ரயில்களில் சிக்கி சிங்கங்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் வனத்துறை சாா்பில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.