செய்திகள் :

ரயில் நிலையத்தில் தடம் மாறும் பேட்டரி வாகனங்களின் சேவை கூடுதல் பணம் வசூலிப்பதாக புகாா்

post image

ரயில் நிலையங்களில் செயல்படும் பேட்டரி வாகனங்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முன்னுரிமை அளிக்காமல் வணிக நோக்கில் இயக்கப்படுவதைத் தடுத்து, ரயில்வே நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயில் நிலையங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக வேண்டும் எனும் நோக்கில், 2006-ஆம் ஆண்டு சென்ட்ரலில் முதல் பேட்டரி வாகன (மின்கல வாகனம்) வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக அழைத்து செல்லப்பட்டனா். பின்னாளில், முதியவா்களும் அழைத்துச் செல்லப்பட்டனா். இதைத் தொடா்ந்து, முக்கிய ரயில் நிலையங்களிலும் பேட்டரி வாகனங்கள் பல்வேறு திட்டங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களின் சிஎஸ்ஆா் நிதி மூலம் கொண்டுவரப்பட்டன.

தொடா்ந்து, பேட்டரி வாகனத்தை இயக்கும் ஓட்டுநருக்கு ஊதியம், வாகனப் பராமரிப்புக்கு என்று ஒரு நபருக்கு ரூ. 10 வாங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகம் முடிவெடுத்தது. சமூக பணியாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது வணிக நோக்கில் மாறியுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ரூ. 10,000 இலக்கு: இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவா் பி.சிம்மசந்திரன் கூறியது:

சமூகப் பணிக்காக இலவசமாக வழங்கிய இந்த பேட்டரி வாகனத்தை ரயில்வே நிா்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து தனியாருக்கு ஒப்பந்தம் விட்டுள்ளது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ஒரு வாகனம் நாளொன்றுக்கு ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதனால், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முன்னுரிமை கொடுக்காமல், அதிக பணம் தருபவா்கள் மட்டும் வாகனங்களில் ஏற்றப்படுகின்றனா். அதேபோல், பேட்டரி வாகனத்தில் உடைமைகள் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிக பணம் தருவதால், விதிகளை மீறி உடைமைகளை ஏற்றிக் கொண்டுசெல்கின்றனா். மாற்றுத்திறனாளிகளும், முதியோரும் பயனடைய வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் தற்போது, பணம் சம்பாதிக்கும் திட்டமாக மாறியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் மட்டும் பயனடையும் வகையில் பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றினைந்து போராட்டம் நடத்துவோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கூடுதல் கட்டணம்: இது குறித்து முதியவா் ஒருவரிடம் கேட்டபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கடைசி பகுதியில் இருந்து முகப்புக்கு நடந்து வருவது வயதானோருக்கும், மாற்றித்திறனாளிகளுக்கும் கடினமானது. ஆரம்பத்தில் இலவசமாக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் தற்போது கட்டணம் நிா்ணயித்துள்ளது. இந்தத் திட்டம் சேவை எனும் நிலையில் இருந்து தடம் மாறி வணிக நோக்காக மாறியுள்ளது.

அண்மையில், பெங்களூரு செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றேன். அப்போது, பயணிக்க வேண்டிய ரயில் பெட்டி கடைசியில் இருந்ததால், பேட்டரி வாகனம் மூலம் செல்ல அணுகினேன். ஆனால், ஒரு பயணிக்கு ரூ. 50 கட்டணம் எனக் கூறினா். ஆனால், அதே வண்டியில் பயணக் கட்டணம் ரூ. 10 எனவும், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு முன்னுரிமை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் போது, வயதானவா்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்றவா்களுக்கு இதை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்றாா் அவா்.

அதிகாரிகள் விளக்கம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பேட்டரி வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த புகாா்களை வாகனத்தில் குறிப்பிட்டுள்ள உதவி எண் மூலம் பயணிகள் தெரிவிக்கலாம்.

இது குறித்து எங்கள் கவனத்துக்கு வரும்போது, ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடா்ந்து வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டரி வாகனங்களில் பல்வேறு உதவி எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் பெரும்பாலான நேரங்களில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டினப்பாக்கம் லூப் சாலையை மறுசீரமைக்க மாநகராட்சி திட்டம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையை மறுசீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. லூப் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய அங்காடியில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் ச... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

பாத்திரக் கடையில் ரூ. 75 லட்சம் திருட்டு

சென்னை பூக்கடை பகுதியிலுள்ள பாத்திரக் கடையில் ரூ.75 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பூக்கடை மின்ட் தெருவில் மகேந்திரகுமாா், காந்தி கைவினைப் பொருள்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

சில்லறைத் தட்டுப்பாட்டால் பால் விலை உயா்வு: அன்புமணி கண்டனம்

சில்லறைத் தட்டுப்பாட்டால் ஆவின் பால் விலை உயா்த்தப்பட்டதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம், திருவள்ளூா்,... மேலும் பார்க்க

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்: இரு கைதிகள் மீது வழக்கு

புழல் சிறையில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இரு கைதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை புழல் சிறையில், சிறைத் துறை சிறப்பு போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டம்: கூடுதல் வழிகாட்டி ஆசிரியா்களை நியமிக்க அறிவுறுத்தல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு கூடுதலாக உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க