ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தது இந்தியா
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியா குறைத்தது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த விலை சலுகையை ரஷியா குறைத்ததால் இறக்குமதியையும் இந்தியா குறைத்துள்ளது.
எனினும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் பல ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதைக் வெகுவாக குறைத்தன. ரஷியாவை பொருளாதாரரீதியாக முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டன. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது.
கடந்த 2022 பிப்ரவரி முதல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது. இதனால், ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு 1 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரித்தது.
ரஷியா கச்சா எண்ணெயை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. இதில் சீனா முதலிடத்தில் உள்ளது. ரஷியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 37 சதவீதம் இந்தியாவால் வாங்கப்படுகிறது. சீனாவின் பங்களிப்பு 47 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பா் மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 55 சதவீதம் அளவுக்கு குறைந்தது. கடந்த 2022 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்த அளவு குறைவாக கச்சா எண்ணெய் இறக்குமதியாவது இதுவே முதல்முறையாகும். ரஷிய கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து சலுகைகள் அளிப்பதை குறைத்ததைத் தொடா்ந்து இந்திய இறக்குமதியும் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் மட்டுமல்லாது ரஷியாவிடம் இருந்து நிலக்கரியையும் இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த நவம்பா் மாத நிலவரப்படி ரஷியாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் 17 சதவீதம் இந்தியாவுக்கு வருகிறது. ரஷியாவிடம் இருந்து அதிக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது.
இதிலும் 46 சதவீதத்துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. துருக்கி, தென்கொரியா ஆகியவை முறையே மூன்று, நான்காவது இடத்தில் உள்ளன.