ராகுல் காந்தியை சந்திக்கிறாரா விஜய்? - செல்வப்பெருந்தகை பதில்!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் விஜய்யும் நேரில் சந்திக்கவிருப்பதாக பரவி வரும் தகவல் குறித்தும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ராகுலை சந்திக்க விஜய் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டிருக்கிறாரா? என நிருபர் கேட்ட கேள்விக்கு, 'தெரியவில்லை. எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.' என்றார்.
மேற்கொண்டு பேசியவர், 'ஜெயலலிதா மோடியா லேடியா என்று கேட்டார். அவர் இருந்த வரைக்கும் ஜி.எஸ்.டி, உதய் மின் திட்டம், நீட் தேர்வு என எதிலும் கையெழுத்திடவில்லை. மாநில உரிமைகளுக்காக நின்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்.

இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்றைக்கு மின் கட்டணம் இவ்வளவு உயர்ந்திருக்கிறது எனில் அதற்கு எடப்பாடிதான் காரணம். நீட் தேர்வையும் ஜி.எஸ்.டியையும் ஏற்றுக்கொண்டு இவர்தானே கையெழுத்திட்டார்? அவர் ஒரு விரலை நீட்டி விமர்சிக்கையில், நான்கு அவரை நோக்கியே நிற்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.' என்றார்.