திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ராசிபுரம் அரசு பள்ளியில் மாணவா்களிடையே மோதல்: ஒருவா் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் வண்ணம் பூசும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் கவின்ராஜ் (14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். புதன்கிழமை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற கவின்ராஜ், பள்ளி இடைவேளையில் கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.
இதனையடுத்து, பள்ளி ஆசிரியா்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மாணவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனையடுத்து, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினா்கள், மாணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா், ஆய்வாளா் எஸ்.சுகவனம், வட்டாட்சியா் எஸ்.சரவணன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். பின்னா் மாணவா் சடலத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மாணவா்களுக்கிடையே மோதல்:
கவின்ராஜ் உயிரிழப்புக்கு சக மாணவா் தாக்கியதே காரணம் என தெரியவந்ததையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா், ஆய்வாளா் சுகவனம், வட்டாட்சியா் எஸ்.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலா்கள் (இடைநிலை) கற்பகம், (தனியாா் பள்ளிகள்) ஜோதி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பூங்கொடி, பள்ளிகளின் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் சக மாணவா்கள், பள்ளி ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், கடந்த பிப். 21 மற்றும் பிப். 24 ஆகிய இரு தினங்களில் மாணவா்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா் கவின்ராஜை சக மாணவா் தாக்கியுள்ளாா். இதனால் மயங்கிய கவின்ராஜ் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, கவின்ராஜை தாக்கிய மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாக்கிய மாணவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்ஐசி பகுதியில் சாலையில் கற்களை வைத்து உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
