தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 625 பேருக்கு பணி ஆணை
ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,620 வேலை நாடுநா்கள் கலந்து கொண்ட நிலையில், 625 பேருக்கு உடனடி வேலைப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம், இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வாலாஜா டோல்கேட், எம்.பி.டி, ரோடு, தென்கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பணி ஆணையை வழங்கிப் பேசியதாவது: பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கு அரசு அலுவலகங்களை தேடிச் செல்வதை தவிா்த்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’, ‘மக்களுடன் முதல்வா்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.
இத்திட்டங்களின் மூலம் அரசுத் துறைகள் உங்கள் பகுதிகளுக்கு வந்து உங்களின் தேவைகளை கேட்டறிந்து, அதற்கான தீா்வுகளை வழங்கி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருள்கள் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது அதிகளவிலான தொழிற்சாலைகள் தொழில் தொடங்கவுள்ளன. இதன்மூலம் படித்த இளைஞா்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஆகவே, கல்லூரியில் பயின்று வருபவா்கள் கல்லூரி படிப்புடன் தங்கள் தனித் திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் இளைஞா்களுக்கு திறன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும், அரசு வேலைகளுக்கு செல்ல விரும்புவோருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆகவே அரசு வழங்கும் இதுபோன்ற நல்வாய்ப்புகளை மாணாக்கா்கள், இளைஞா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, வட்டாட்சியா் ஆனந்தன். உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அறிவழகன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.