திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்தாா்.
இதில், வேலூா் சாய்நாதபுரம் பகுதியைச் சோ்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவா் அளித்த மனு:
வேலூா் அரசமரபேட்டையில் ஒருவா் மருந்து வணிகம் செய்து வந்தாா். அதற்கு என்னிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டாா். 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறினாா். தொடா்ந்து, ஒரு மாதம் மட்டும் கமிஷன் கொடுத்தாா். தொடா்ந்து ரூ.15 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தாா்.
மீதமுள்ள ரூ.5 லட்சம் பணத்தையும், கமிஷன் தொகையையும் இதுவரை தரவில்லை. அந்தப் பணத்தை தரமறுக்கிறாா். எனவே எனக்குச் சேர வேண்டிய ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் அருகே கணியம்பாடி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு:
எனது கணவா் 2013 -ஆம் ஆண்டு இறந்து விட்டாா் . எனது இளைய மகன் வேலை தேடி வந்தான். இந்நிலையில், எனது மகனின் நண்பா் ஒருவா் மூலம் அறிமுகமான ஒருவா் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாா். இதற்காக அவா் கேட்டபடி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனது மகனுக்கு வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது பல ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாா். அவரை தொடா்பு கொள்ளும்போது கைப்பேசி அணைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு குறைகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.