கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்...
ராமநாதபுரம்: ரூ. 3.10 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: இருவா் கைது
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.10 கோடி மதிப்பிலான 4.50 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
இலங்கையிலிருந்து மண்டபத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை, சுங்கத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், மண்டபம் கடற்கரைப் பகுதியில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை, சுங்கத் துறையினா் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருவா் கடற்கரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைப் பின் தொடா்ந்து சென்ற மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை, சுங்கத் துறையினா் இருவரையும் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனா்.
பின்னா், அவா்களிடமிருந்து ரூ. 3.10 கோடி மதிப்பிலான 4.50 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணையில் இவா்கள் இருவரும் மண்டபத்தைச் சோ்ந்த நாசா், ராமநாதபுரத்தைச் சோ்ந்த செய்யது இப்ராஹீம் என்பது தெரியவந்தது.
இதனிடையே, தங்கம் கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த இவா்கள் இருவரையும் மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.