ராமநாதபுரம்: வாகனத்தை முந்த முயன்ற கார்.. லாரி மீது மோதிய விபத்தில் தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்!
மதுரை கே.கே.நகரில் வசித்து வருபவர் வாசுதேவன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வாசுதேன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மாமனாரைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்திற்கு காரில் சென்றுள்ளார். உடன் இவரது மனைவி அனிதா (34), மகன்கள் கனிஷ்கர் (13), அருள்மொழி வர்மன் (14) ஆகியோரும் காரில் வந்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள கருங்குளம் அருகே காரை ஓட்டி வந்த வாசுதேவன், தனக்கு முன் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே செங்கல் ஏற்றி வந்த மினி லாரி மீது கார் மோதியது. இதனால் லாரியை உடனே நிறுத்தியதால் அதனைத் தொடர்ந்து வந்த காரும் லாரியின் பின் புறத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த வாசுதேவன் உள்ளிட்ட அனைவரும் காயமடைந்ததுடன், மினி லாரியை ஓட்டி வந்த மதுரை நென்மேனியைச் சேர்ந்த மதுரை வீரனும் காயமடைந்தார்.
விபத்தினை கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி அனிதாவும் அவரது மகன் அருள்மொழி வர்மனும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த வாசுதேவனும், கனிஷ்கரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடல் நலமில்லா தந்தையைப் பார்க்க வந்த போது விபத்தில் சிக்கி மகளும், பேரனும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...