``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமி...
ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?
பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது.
காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்தும் விடுபட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போதுதான், ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் குறித்து தெரியவந்துள்ளது.
தற்போது இந்த விமானத்திற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இனி பறப்பதற்குப் பயன்படாத இந்த விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில், விமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


















