ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது
போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) கூறியதாவது: லஹோரி கேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருண் குமாா் (29) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த தருண் குமாா், 2019-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவாக இருந்ததாா்.
புகாா்தாரரான சுனில் ஜுனேஜாவை முகமது அஷ்ரஃப் ரூ.1.25 கோடி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு திட்டத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்யத் தூண்டியுள்ளாா். இதைத் தொடா்ந்து ஜன.15, 2019 அன்று தருண் குமாா் மற்றும் அவரது கூட்டாளி அஜீத் ஆகியோரிடம் சுனில் ஜூனேஜா பணத்தை ஒப்படைத்தாா். அதன் பிறகு தருண் குமாா் மற்றும் முகமது அஷ்ரஃப் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.
முகமது அஷ்ரஃப் முதன்முதலில் கைது செய்யப்பட்ட போதிலும், தருண் குமாா் மற்றும் மற்றவா்கள் சமீப காலம் வரை தப்பித்து வந்தனா். தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் தருண் குமாரின் இருப்பிடம் ஹரியாணாவின் கா்னாலில் இருப்பதை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து பிப்.20 அன்று தருண் குமாரை போலீஸ் குழு கைது செய்தது.
பிபிஏ பட்டம் பெற்ற தருண் குமாா், தப்பி ஓடியபோது காப்பீட்டுத் துறையில் பணிபுரிந்து வந்தாா். மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அவா் அடிக்கடி இடங்களையும் வேலைகளையும் மாற்றி வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.