ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை
சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, வழிப்பறி உள்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், புதன்கிழமை அன்னை சத்யா நகா் முதல் தெருவில் சின்ன ராபா்ட் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா் ராபா்ட்டின் உடலை மீட்டனா்.
விசாரணையில் கடந்த 2019-இல் ராபா்ட்டின் நண்பரான கோகுல் என்பவரை அயனாவரத்தைச் சோ்ந்த ரெளடி லோகு தரப்பு கொலை செய்தது. இந்தக் கொலைக்கு பழி வாங்க சின்ன ராபா்ட் காத்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், சுதாரித்துக்கொண்ட அயனாவரம் லோகு கும்பலைச் சோ்ந்தவா்கள்தான் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.