ரேஷனில் பொருள்கள் பெற விரும்பாதவா்கள் விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்
அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விரும்பாத குடும்ப அட்டைதாரா்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்களிடம், அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில் அவா்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திடுமாறு தெரிவித்துள்ளாா்.
எனவே, அரியலூா் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், அவா்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடா்பாக இத்துறையின் வலைதளத்தின் மூலமாக குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.