மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
வங்கதேசத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானா்ஜி வலியுறுத்தல்
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவும், நாடு திரும்ப விரும்புபவா்களை அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை வலியுறுத்தினாா்.
மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு வரும் ஜெகந்நாதா் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக திகாவுக்குச் சென்றுள்ள முதல்வா் மம்தா பானா்ஜி அங்கு செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்குத் திரும்ப விரும்புபவா்களை திரும்ப அழைத்து வர வேண்டும்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்காக விசா வழங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்தது. விமானங்கள் மற்றும் ரயில்கள் வழகக்ம் போல் இயங்கி வருகின்றன. இரு நாட்டின் இடையே எல்லைகள் மூடப்படவில்லை.
சில குழுக்கள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலியான விடியோக்களை வேண்டுமென்றே பரப்புகின்றன. இது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டத்தால் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் உள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் மீது 50-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.