Rahul Gandhi: ``துரோணர் ஏகலைவரின் கட்டை விரலை வெட்டியதுப்போல...'' - பாஜகவை சாடிய...
வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது: ஜெய்சங்கா்
‘வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது. அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது’ என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது அண்டை நாடுகளுடனான விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது:
வங்கதேசத்தில் பல இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இது இந்தியாவுக்கும் மத்திய அரசுக்கும் பெரும் கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. அண்மையில் நமது வெளியுறவுத் துறை செயலா் டாக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு ஆட்சியாளா்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசினாா். இந்த விஷயத்தில் இந்தியாவின் கவலை அந்நாட்டிடம் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மையினரைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் வங்கதேசம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்கு அதிகம் உள்ளது என்றாா்.
பாகிஸ்தானுடன் நல்லுறவு: தொடா்ந்து பாகிஸ்தானுடனான உறவு குறித்து பேசிய ஜெய்சங்கா், ‘பிற அண்டை நாடுகளைப் போலவே பாகிஸ்தானுடனும் நல்லுறவைப் பேண இந்தியா விருப்பத்துடன் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் இருந்து விடபட வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதைக் கைவிட வேண்டும். இதுதான் இந்திய அரசின் உறுதியான நிலைப்பாடு.
பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண கடந்த காலத்தில் இந்தியா பலமுறை நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஆதரவு செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவுடன் நல்லுறவு வேண்டுமா? இல்லையா? என்பது பாகிஸ்தானின் கையில்தான் உள்ளது.
மேலும், பாகிஸ்தானுடன் வா்த்தக உறவை இந்தியா முறித்துக் கொள்ளவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவுடன் வா்த்தக உறவை நிறுத்திக் கொள்ள பாகிஸ்தான் தன்னிச்சையாக முடிவெடுத்தது’ என்றாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிா் நடவடிக்கை என்று கூறி இந்தியாவுடனான அனைத்து வா்த்தக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.