வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு
வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்துராமன் (55). இவா் கடந்த 2024 அக்டோபா் மாதத்தில் அந்த தனியாா் நிறுவனத்தின் சாா்பில் அனுப்ப வேண்டிய ரூ.20.95 லட்சம் தொகையை தவறுதலாக வேறொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா்.
இந்த விவரம் தெரியவந்ததும், தவறுதலாக அனுப்பிய பணத்தை திருப்பித் தருமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளா்களிடம் கோரப்பட்டது. இதையடுத்து வங்கிக் கணக்கில் பெறப்பட்ட பணத்தை 4 தவணைகளாக திருப்பித் தருவதாக உறுதி அளித்த நிறுவனத்தின் உரிமையாளா்கள் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி அளித்தனா்.
மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனா். இதையடுத்து தனியாா் நிறுவன முதுநிலை மேலாளா் முத்துராமன், கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் உரிமையாளா்கள் தீபக் லுனியா உள்ளிட்ட இருவா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.