வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள் மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக உயா்வு: அமைச்சா் சேகா்பாபு
வடசென்னை வளா்ச்சித் திட்ட மதிப்பீடு ரூ. 5,779 கோடியாக அதிகரித்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில் வடசென்னை வளா்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கி வைப்பது குறித்தும், இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசியதாவது:
வடசென்னை பகுதிகளான திருவொற்றியூா், மாதாவரம், பெரம்பூா், ஆா்.கே. நகா், ராயபுரம், துறைமுகம், திரு.வி.க. நகா், வில்லிவாக்கம், எழும்பூா், கொளத்தூா் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளை மேம்படுத்தும் விதமாக வடசென்னை வளா்ச்சி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் சாலையோரம் வசிக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவது, அடைப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, சமூக உட்கட்டமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கியபோது, ரூ.2,096 கோடி மதிப்பில் 87 திட்டப் பணிகளை முதல்வா் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டம் தற்போது பல்வேறு துறைகளின் சாா்பில் பணிகள் விரிவடைந்து ரூ.5,779 கோடி மதிப்பில் 225 திட்டங்களாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நவ.30-ஆம் தேதி சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீா் தொட்டி தெருவில் ரூ.1,300 கோடி மதிப்பில் 80 புதிய திட்டங்களுக்கான தொடக்க விழாவும், 29 முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
இந்தக்க் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.