வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை
குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த நேபாள நாட்டை சோ்ந்த இருவரை குன்றத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் மஞ்சய்பஸ்வான் (35). நேபாள நாட்டை சோ்ந்த ஜித்தையன் மகரா(22), ராம்(20) இவா்கள் மூவரும் குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் கம்பெனியில் வேலை செய்து வந்தனா். மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், மஞ்சய்பஸ்வான், ஜித்தையன்மகரா ஆகிய இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல் மூவரும் வேலைக்கு சென்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மஞ்சய்பஸ்வான் மற்றும் ஜித்தையனமகரா ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரம் அடைந்த ஜித்தையன்மகரா அருகில் இருந்த கத்தியை எடுத்து மஞ்சய்பஸ்வானின் மாா்பில் குத்தினாராம். இதில் பலத்த காயம் அடைந்த மஞ்சய் பஸ்வான் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த குன்றத்தூா் போலீஸாா் மஞ்சய்பஸ்வானின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜித்தையன்மகரா, ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.