தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அ...
வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth
இந்தியாவின் தேசிய பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிசம்பர் 8) சிறப்பு விவாதம் நடைபெற்றது.
பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலையுரையாற்றி விவாதம் செய்தனர்.
வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன, மக்களவையில் மோடியின் உரை என்ன, அதற்கு காங்கிரஸ் முன்வைத்த எதிர்வாதங்கள் என்ன என்பனவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858-ல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் 1975-ல் வங்க மொழி மற்றும் சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடலை எழுதினார்.
பாடலில், வங்க நிலம், அதன் மக்கள், சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பார். பின்னர் இப்பாடலை, தான் எழுதிய `ஆனந்த மடம்' எனும் நாவலில் சேர்த்தார். இப்பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்திருந்தார்.

1905-ல் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினையின்போது இப்பாடல் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாறியது. அதுவே 1900-களில் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய அளவில் உருவெடுத்தது.
பின்னர் 1937-ல் காங்கிரஸ் இயக்கமானது காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் வந்தே மாதரம் பாடலுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்தது.

அப்போது, வந்தே மாதரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் இருப்பதாக முக்கிய ஆட்சேபனை வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது சீக்கிய, சமண, பௌத்த அமைப்புகள் என பல தரப்பிலிருந்து இந்த ஆட்சேபனை பிரதானமாக வந்தது.
ஆனால், ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற வலதுசாரி அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.
மறுமுனையில் முழு பாடலையும் முஸ்லிம் லீக் எதிர்த்தது. இறுதியில் இதற்கு ஒரு தீர்வாக, வந்தே மாதரத்தில் எந்தவொரு மதம் சார்ந்த பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மோடி கடந்த நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியொன்றைத் தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் மோடி, ``1937-ல் வந்தே மாதரம் பாடலின் சில பகுதிகள், குறிப்பாக அதன் ஆன்மாவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. வந்தே மாதரம் பிளக்கப்பட்டது.
ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? பிரிவினைக்கான விதைகளை விதைத்தது இதுதான்" என்று காங்கிரஸைக் குற்றம்சாட்டினார்.

அவரைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நவம்பர் 10-ம் தேதி, இதை இன்னும் பெரிதாக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார்.
அதோடு, ``வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத மாதாவை எதிர்க்கின்றனர். இன்றும் இந்தியாவில் வாழும், உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை பாடாமல் இருக்கின்றனர்" என்று காட்டமாக பேசினார்.
இதற்கு அப்போதே, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 10 மணி நேரம் ஒதுக்கி சிறப்பு விவாதத்தைக் கூட்டியிருக்கிறது மோடி 3.0 அரசு.
மக்களவையில் உரையாற்றிய மோடி, ``வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.
100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு எமர்ஜென்சியில் இருந்தது. தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா ஒரு இருண்ட காலத்தைக் கண்டது.
இன்று வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதன் பெருமையை நிலைநிறுத்த ஒரு வாய்ப்பு இது.
இந்தப் பாடல்தான் 1947-ல் நம்மைச் சுதந்திரம் பெறத் தூண்டியது. வந்தே மாதரம் வெறுமனே அரசியல் சுதந்திரத்திற்கான ஒரு மந்திரம் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது.
வேதங்களில், `இந்நிலம் என் தாய், நான் இம்மண்ணின் மகன்' என்று கூறப்பட்டிருக்கிறது. ராமர் இலங்கையை விட்டுக்கொடுக்கும்போது இதே விஷயத்தைச் சொன்னார்.

வந்தே மாதரம் நமது சிறந்த கலாச்சார மரபின் நவீன அவதாரம். வங்காளத்தின் திறன்கள் நாட்டின் மையப் புள்ளி என்பதை அறிந்த பிரிட்டிஷார், வங்கத்தைப் பிரித்தால் நாடு பிளவுபடும் என்று எண்ணினார்கள்.
அப்போது 1905-ல் வங்கத்தை அவர்கள் பிரித்தபோது, வந்தே மாதரம் ஒரு பாறை போல் நின்றது" என்று பெருமிதத்தோடு பேசிக்கொண்டே வழக்கம்போல நேருவை விமர்சிக்கத் தொடங்கினார்.
``வந்தே மாதரத்தை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. முகமது அலி ஜின்னா 1937 அக்டோபர் 15-தேதி லக்னோவில் இருந்து வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு கோஷத்தை எழுப்பினார்.
முஸ்லிம் லீக்கின் ஆதாரமற்ற அறிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுத்த போதிலும், வந்தே மாதரத்தை நேரு விசாரிக்கத் தொடங்கினார்.
அடுத்த ஐந்து நாளில், `ஜின்னாவின் உணர்வுடன் உடன்படுகிறேன். ஆனந்த மடத்திலுள்ள வந்தே மாதரத்தின் பின்னணி முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யும்" என்று சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு கடிதம் எழுதினார்.

அதைத்தொடர்ந்து, அக்டோபர் 26 முதல் வங்கத்தில் வந்தே மாதரம் பகுப்பாய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் அன்றே வந்தே மாதரத்துடன் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டது.
சமூக நல்லிணக்கம் என்று பாடலைப் பிரித்தனர். ஆனால் வரலாறு என்னவென்றால், முஸ்லிம் லீக்கிடம் காங்கிரஸ் அடிபணிந்தது.
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த இதுதான் அவர்களின் வழி. பிறகு, காங்கிரஸ் மண்டியிட்டு இந்தியப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டது.
காங்கிரஸின் கொள்கைகள் இன்றும் அப்படியே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் காங்கிரஸாக மாறிவிட்டது.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வந்தே மாதரத்தை இன்றும் எதிர்க்கின்றன. அதைச் சுற்றி சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றன" என்று மோடி கடுமையாக சாடினார்.
காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் தனது உரையில், ``பிரதமரின் ஒரு மணிநேர உரையை உற்றுக் கவனித்தேன். அதில் அவர்களின் (பாஜக) இரண்டு நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தது.
முதல் நோக்கம், தங்களின் அரசியல் மூதாதையர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதாகக் கூறுவதன் மூலம், வரலாற்றை திரித்து எழுதுவது.
இரண்டாவது நோக்கம், இந்த விவாதத்திற்கு அரசியல் சாயம் பூசுவது.

நான் கேட்கிறேன்... உங்களின் அரசியல் மூதாதையர்கள் 'வந்தே மாதரம்' பாடலின் நோக்கத்தை எப்போது நிறைவேற்றினார்கள்? எப்போது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்தார்கள்?
'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எங்கே இருந்தார்கள்?
பா.ஜ.க-வின் அரசியல் மூதாதையர்கள் ஒருவர் கூட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
முழு நாடும் 'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டபோது, உங்கள் அரசியல் மூதாதையர்கள் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றவோ அல்லது தேசிய கீதத்தைப் பாடவோ இல்லை.
இவ்வாறிருக்க, இந்த நாட்டைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்...
இன்று நாட்டு மக்கள் காற்று மாசு, எல்லைப் பாதுகாப்பு எனப் பல பிரச்னைகளை எழுப்புகிறார்கள். ஆனால் அந்த விஷயங்கள் எதுவும் பிரதமரின் உரையில் இல்லை.

UPI, ஆதார் பற்றி பேசும் இந்த மோடி அரசு, இயந்திரம் படிக்கக்கூடிய (machine-readable) வாக்காளர் பட்டியலை வழங்க விரும்பவில்லை.
மக்களின் வாக்குகள் பாதுகாப்பாக இல்லை, சுகாதாரம் பாதுகாப்பாக இல்லை, எல்லைகள் பாதுகாப்பாக இல்லை, எந்தவொரு வர்த்தகமும் பாதுகாப்பாக இல்லை" என்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடுக்கினார்.
மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி, ``இன்று இந்த அவையில் வந்தே மாதரம் சிறப்பு விவாதம் நடத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது.
ஒன்று மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவிருப்பதால் பிரதமர் தனது பங்கை நிலைநாட்ட விரும்புகிறார்.
இன்னொன்று, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஆகியோர் மீது இந்த அரசு புதிய குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்புகிறது.
இதைச் செய்வதன் மூலம் அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை நினைக்கிறது மோடி அரசு.

பிரதமர் நன்றாக உரையாற்றுகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. மோடி உண்மைகளை மக்களிடம் முன்வைக்கும் விதமே ஒரு கலைதான். ஆனால் நான் மக்களின் பிரதிநிதி, கலைஞன் அல்ல.
1896-ல் ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலில் வந்தே மாதரம் பாடலை ஓர் அமர்வில் பாடினார் என்று மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்று அவருக்குத் தெரியவில்லை.
நீங்கள் தேர்தலுக்காக இருக்கிறீர்கள். நாங்கள் நாட்டு மக்களுக்காக இருக்கிறோம். நாங்கள் தோற்றாலும், இந்த மண்ணுக்காக உங்களுக்கெதிராகவும், உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், வந்தே மாதரம் கூட்டாகப் பாடப்படுகிறது. ஆனால், பா.ஜ.க -.ஆர்.எஸ்.எஸ் அமர்வுகளில் வந்தே மாதரம் பாடப்படுகிறதா?
அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே மாதரத்தை கேள்விக்குட்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரான அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

வந்தே மாதரம் பாடலைப் பிரித்ததாகக் குற்றம்சாட்டுவதன் மூலம், முழு அரசியலமைப்பு சபையையும் பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. அதன் ஒவ்வொரு தலைவரையும் குற்றவாளிகள் என்கிறது.
இன்று, நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, பெண்களின் நிலை குறித்து அவையில் ஏன் விவாதம் இல்லை?
உண்மையில், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை மோடி அரசு மறைக்க விரும்புகிறது. நம் பிரதமருக்கு நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டது.
அவரது கொள்கைகள் நாட்டைப் பலவீனப்படுத்துகின்றன. எனவே கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்..." என்று விமர்சித்தார்.
நேருவை மோடி குற்றம்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய பிரியங்கா காந்தி, ``மோடி பிரதமராக இருந்த வருடங்களின் எண்ணிக்கையானது, இந்த நாட்டுக்காக நேரு சிறையில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம்.
அதன் பிறகு நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இந்த நாட்டுக்கு உழைத்தார். நேரு இஸ்ரோவை நிறுவியிருக்காவிட்டால் மங்கள்யான் நிகழ்ந்திருக்காது...
டிஆர்டிஓ (DRDO)-வை நிறுவியிருக்காவிட்டால் இன்று தேஜஸ் போர் விமானங்கள் இல்லை... ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றை நிறுவியிருக்காவிட்டால் இன்று ஐ.டி துறையில் முன்னேறியிருக்க மாட்டோம்...

எய்ம்ஸ் (AIIMS) நிறுவியிருக்காவிட்டால் எவ்வாறு கொரோனாவை நாம் எதிர்கொண்டிருப்போம்...
BHEL - SAIL போன்ற பொதுத்துறை நிறுவனங்களை நிறுவியிருக்காவிட்டால் வளர்ந்த இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படும்... தனது கடைசி மூச்சு வரை இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர் நேரு.
சில மாதங்களுக்கு முன்பு மோடி, எதிர்க்கட்சிகள் தன்னை எவ்வளவு அவமதித்தார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். ஒரு 90, 99 அவமானங்களை அவர் பட்டியலிட்டிருக்கலாம்.
மோடிக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். நேரு மீது உங்களுக்கு என்னென்ன புகார்கள் இருந்தாலும், என்னென்ன அவமானப்படுத்த வேண்டும் என்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள்.

அது 999 அவமானங்களாக இருந்தாலும் 9,999 அவமானங்களாக இருந்தாலும் சரி ஒரு பட்டியலை போடுங்கள்.
10 மணிநேரமோ, 20 மணிநேரமோ எவ்வளவு மணி நேரமானாலும் நாம் தனியாக விவாதிப்போம்.
ஆனால், இந்த சபையின் நேரம் விலைமதிப்பற்றது. பொதுமக்கள் எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும்" என்று கூறினார்.


















