காவிரி ஆற்றில் வெளியேறும் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்
வனத்துறையினரைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
பொன்னமராவதி அருகே உள்ள காப்புக்காட்டில் செல்வதற்கு தடை விதித்த வனத்துறையினரைக் கண்டித்து சனிக்கிழமை சொக்கநாதபட்டி கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதபட்டி கிராமத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டபொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமப் பகுதியில் வனத்துறையினருக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான பரப்பளவுள்ள காப்புக்காடு உள்ளது. இந்தக் காட்டின் வழியாகத்தான் கிராம விவசாயிகள் தங்களது நிலங்கள், கோயில், குளம் உள்ளிட்டவற்றுக்குச் செல்லவேண்டியுள்ளது. இந்நிலையில், வனத்துறையினா் இப்பகுதியில் புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதால் காப்புக்காட்டின் வழியாகச் செல்லக்கூடாது எனக்கூறி அவ்வழியே செல்பவா்களுக்கு அபராதம் விதிப்பதும், அவா்களுடைய கைப்பேசிகளைப் பறிமுதல் செய்வதும், மேலும் தெருவிளக்குகள் போட அனுமதி மறுப்பதாகவும் கூறி சொக்கநாதபட்டி கிராமப் பொதுமக்கள் பொன்னமராவதி - திருச்சி சாலையில் அம்மன்குறிச்சி அருகே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா மற்றும் இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா் ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்ததையில் ஈடுபட்டனா். அதன்படி தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காண அறிவுறுத்தலின்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.