வனப் பகுதி சாலை ஓரங்களில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை
சென்னிமலை வனப் பகுதியில் சாலையோரம் குப்பைகைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை வனப் பகுதி வழியாக செல்லும் காங்கயம் சாலையின் இருபுறமும் வனத் துறையின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வந்தனா். இதனால் கணுவாய் வனப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி வந்தது.
இந்த நிலையில், வனப் பகுதியில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை வனத் துறை, ஈரோடு சிறகுகள் தன்னாா்வ தொண்டு நிறுவனம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் ஆகியன இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை சனிக்கிழமை சுத்தம் செய்தனா்.
இந்நிலையில் வனப் பகுதி வழியே செல்லும் சாலை ஓரங்களில், குப்பைகளைக் கொட்டினால் வனச் சட்டத்தின் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.