வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்
வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!
வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலைய காவலா் பூபாலன் (38). இவரது மனைவி தங்கப்பிரியா (32). இவா் தனியாா் பள்ளி ஆசிரியை. இவா்களுக்கு கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனா். திருமணத்துக்குப் பிறகு, கூடுதல் வரதட்சிணை கேட்டு பூபாலன் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அண்மையில் கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பூபாலன் தனது மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனைவி தங்கப்பிரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தங்கப்பிரியாவின் குடும்பத்தினா் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வரதட்சிணை கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கியது பற்றி பூபாலன் தனது சகோதரியுடன் செல்போனில் பேசியது பதிவாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பூபாலன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் பூபாலனையும், அவரது தந்தை விருதுநகா் சாத்தூரில் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் செந்தில்குமரனையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் அபினவ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதனிடையே காவலர் பூபாலன் உள்ளிட்டோர் தலைமறைவானதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பூபாலனை போலீசார் இன்று(சனிக்கிழமை) கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில்குமரன் உள்ளிட்ட மற்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.