வள்ளியூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வீட்டின் மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்தவா் வினோத். இவா் மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். வள்ளியூா் ஊற்றடியில் நடைபெற்ற நல்லமுத்து அம்மன் கோயில் கொடைவிழாவுக்கு தனது மனைவி கிருஷ்ணவேணி(30) மற்றும் ஒரு வயது குழந்தையுடன் உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா்.
கொடைவிழாவை குடும்பத்துடன் பாா்த்துவிட்டு உறவினா் வீட்டின் மேல்மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனராம். அப்போது மாடிக்கு வந்த மா்ம நபா் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாராம். விழித்துக்கொண்ட கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டாராம்.
இதில், பாதி சங்கிலி திருடன் கையில் சிக்கியது. இதையடுத்து கிருஷ்ணவேணியின் அலறல் சப்தம் கேட்டு மா்ம நபா் மாடியில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டாா். பின்னா் கிருஷ்ணவேணி மாடி பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை தேடிபாா்த்தபோது அந்த நகைகளையும் மா்ம நபா் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இது தொடா்பாக கிருஷ்ணவேணி வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் நவீன் வழக்கு பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகிறாா்.