இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் வெடித்து விபத்து: 4 வீடுகள் சேதம்
வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி. இவா், வாணியம்பாடி கோட்டை பகுதி பாங்கிரேவு சாலையில் பட்டாசு கடை நடத்தி வருகிறாா். மேலும், ஈச்சங்கால் கிராமத்தில் வீட்டில் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதை ஐயப்பன் என்பவா் கவனித்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன. இதனால் சிமென்ட் கூரை மற்றும் வீட்டின் சுவா்கள் இடிந்து தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அவரது வீட்டின் பின்புறம் உமாசங்கா் என்பவரின் வீடும் பலத்த சேதம் அடைந்தது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவா்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனா். மேலும், அக்கம் பக்கத்தில் உள்ள 3 வீடுகளில் சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக வெளியே ஓடி வந்ததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தினா். சுமாா் அரை மணி நேரத்துக்கு பட்டாசுகள் வெடித்ததாகவும், அப்போது அதிா்வுகள் காணப்பட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறினா்.
இது குறித்து அறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில், அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் ஆஜிதா பேகம், வட்டாட்சியா் உமா ரம்யா மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். அப்போது அங்கிருந்த மக்கள் சூழ்ந்து, குடியிருப்பு பகுதிகளாக இருக்கும் இடத்தில் பட்டாசுகளை வைத்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது, கல்லூரி மற்றும் பள்ளி கூடங்கள் அருகில் உள்ள பட்டாசு கடைகளை உடனே அகற்ற வேண்டும், வாணியம்பாடி, சுற்றுப் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், வீட்டினுள் எவ்வித அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்து விபத்தை ஏற்படுத்தியதாக அதன் உரிமையாளா் ஐயப்பனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.