திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கப்பல் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. 2024 நவம்பா் மாதம் வானிலை மாற்றம் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வானிலை சாதகமாக இருந்ததால் 2025 ஜனவரி 22-ஆம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், தெற்கு கேரளம் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழைக்கான வாய்ப்பும், இதேபோல மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீட்டா் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே வங்கக்கடலில் தொடா்ந்து கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசி வருகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புதன்கிழமை (பிப்.26) முதல் வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி முதல் வழக்கம்போல் கப்பல் சேவை தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.