வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை
வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் மனித- யானை மோதல்களுக்கு தமிழக வனத் துறையினா் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனா்.
இதையடுத்து, வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான வனத் துறையினா் மேற்குவங்க வனத் துறை அதிகாரிகளை வால்பாறை வனச் சரகத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனா்.
அப்போது, மனித- யானை மோதல்களை தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2023-ஆம் ஆண்டு யானைகள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வேலி, குடியிருப்புப் பகுதிகளுக்கு யானை வந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகள், என்.சி.எஃப். அமைப்பினா் மூலம் யானைகள் நடமாட்டங்கள் குறித்து பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உத்திகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தற்போது கன்டெய்னரில் செயல்படுத்தப்பட உள்ள ரேஷன் கடைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்ததாக வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் கூறினாா்.