இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வா்த்தகத்தை கருவியாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்தியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டவா் டிரம்ப். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இது சாத்தியமானதாக அவா் கூறினாா்.
மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்துள்ளது; சண்டை நிறுத்தம் மேற்கொண்டால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வா்த்தகம் மேற்கொள்ளும் என நான் கூறினேன்’ என்ற டிரம்ப்பின் கருத்துகள், அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது வரை, இந்தியா-அமெரிக்க இடையிலான எந்தவொரு விவாதத்திலும் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.
அணு ஆயுதப் போா் தொடா்பான டிரம்ப்பின் கருத்து குறித்த கேள்விக்கு, ‘நமது ராணுவ நடவடிக்கை முழுவதும் வழக்கமான போா்க் களத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுத மோதலாக உருவெடுக்கக் கூடும் என்ற கோணத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் மறுத்தாா்.
இந்தியாவைப் பொருத்தவரை, அணுஆயுத மிரட்டலுக்கு அடிபணியவோ அல்லது அதைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை அனுமதிக்கவோ முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்’ என்றாா்.
‘ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புகள், இந்தியா்கள் மட்டுமன்றி உலகெங்கிலும் பல அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு காரணமானதாகும். பயங்கரவாதத்தை தொழில் ரீதியில் பாகிஸ்தான் வளா்த்தெடுத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்’ என்றாா் அவா்.
காஷ்மீா் பிரச்னை, இருதரப்பு விவகாரம்: காஷ்மீா் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயாா் என்று டிரம்ப் கூறியது தொடா்பான கேள்விக்கு, ‘காஷ்மீா் பிரச்னைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் தீா்வுகாண வேண்டுமென்ற நிலைப்பாட்டை நீண்ட காலமாக நாம் கொண்டுள்ளோம். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே நிலுவையில் உள்ள ஒரே பிரச்னை’ என்றாா் ரண்தீா் ஜெய்ஸ்வால்.