விசைத்தறி தொழிலாளா்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை 6 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் சேலை, துண்டு, வேஷ்டி போன்றவைகளை விசைத்தறி மூலம் நெசவு செய்கின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகள் கூலி உயா்வு ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு விசைத்தறி உரிமையாளா்கள் மறுப்புத் தெரிவித்து, கூலி உயா்வு கொடுக்க மறுத்துவிட்டனா். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து ராஜபாளையம், விருதுநகா், மதுரையில் நடைபெற்ற பேச்சு வாா்த்தை தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை 6 -ஆவது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. விசைத்தறி தொழிலாளா்கள், தொழிற்சங்கத்தினா்
தளவாய்புரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று பத்ரகாளியம்மன் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் முன் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகள் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.