விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன்: பிரேமலதா
விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக உள்ளன. தொலைநோக்கு பார்வையோடு அரசு அனுகி இருக்க வேண்டும். திட்டமிடல் சரியாக இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் சொந்த ஊரிலேயே மக்கள் அகதியாக உள்ளனர்.
முன்னறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கு தேவையான உரிய நிவாரண தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு, மக்களிடம் வாங்கிய வரிப் பணங்கள் எங்கே போனது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம் என்று வாய்சவடால் விடுவதை தவிர்த்து முதல்வர் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.
காதல் என்பது பொதுவுடைமை வெளியீட்டுத் தேதி!
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கும் போது தமிழகத்தில் ரூ.2000 கொடுப்பது போதாது, ரேஷன் அட்டைக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இம்மாசோதாவை அனைவரும் ஏற்றுக் கொண்டால்தான் தேமுதிக வரவேற்கும்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் மறைவு வருந்தத்தக்கது. விஜயகாந்த் போல அவர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். நல்ல குடும்ப நண்பர். அவர் இறப்பு கேள்விப்பட்டு வருத்தமடைந்ததாகவும் ஈவிகேஎஸ் உடலுக்கு நாளை நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.