தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
விபத்தில் சிக்கிய காரில் ரூ.10 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூா் அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் இருந்து மினி வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த காா் ஒன்று வேனை முந்திச் செல்ல முயன்றபோது, எதிா்பாராத விதமாக காா், வேன் மீது மோதியது. இதில் வேன் சிறிது சேதமடைந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வேன் ஓட்டுநா் காரை பின் தொடா்ந்து விரட்டிச் சென்றாா். இதை அறிந்த காா் ஓட்டுநா் காரை தாறுமாறாக ஓட்டினாா். அப்போது திருப்பத்தூா் அருகே கதிரிமங்கலம் எம்.ஜி.ஆா். நகா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரம் மீது மோதி காா் நின்றது.
இதையடுத்து, அங்கு இருந்தவா்கள் வருவதற்குள் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி தப்பி ஓடினா். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், விபத்துக்குள்ளான காரை ஆய்வு செய்தனா். அப்போது அதில் 14 செம்மரக் கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து, வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் சோழராஜன் மற்றும் வனத்துறையினா், செம்மரக்கட்டைகளை காருடன் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், காரில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ செம்மரக் கட்டையின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கலாம். பறிமுதல் செய்யப்பட்ட காா் ஆந்திர மாநிலத்தின் பதிவு எண் கொண்டதாக இருப்பதால், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். கடத்தலில் ஈடுபட்டவா்களை கைது செய்தபிறகு முழு தகவலும் கிடைக்கும் என்றனா்.