ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி
விபத்தில் பாதிப்பு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1.35 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூா் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ 1.35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நீடாமங்கலத்தைச் சோ்ந்த இளங்கோவன் (40) 2022-ல் இருசக்கர வாகனத்தில தனது மனைவியுடன் அம்மாபேட்டை சென்று விட்டு ஊருக்கு இரவு திரும்பியபோது பல்ராம்பேட்டை அருகே வெளிச்சம் குறைவாக இருந்ததால் இரு சக்கர வாகனம் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னா், தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதற்கிடையே, நெடுஞ்சாலையின் நடுவில் மண்மேடு இருக்கும் விவரத்தை முன்பே தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்காமல், விளக்குகள் அமைக்காமல் எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கையுமின்றி சாலை அமைத்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்கள், அதற்கான செலவுகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்கு இழப்பீடு கோரி கடந்த ஜூன் மாதம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீதும் அந்த சாலைப் பணியை ஒப்பந்தம் எடுத்திருந்த நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா் மீதும் திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் அடங்கிய குழு, வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தனா். அதில், புகாா்தாரா் தனது வாகனத்துக்கு அரசுக்கு சாலை வரி செலுத்தியுள்ளாா். மேலும் நெடுஞ்சாலை ஆணையம் சாலையைக் கட்டமைத்த தனியாா் கட்டுமான நிறுவனத்திற்கு அந்தச் சாலையில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்யும் உரிமையையும் வழங்குகிறது. எனவே நெடுஞ்சாலை ஆணையத்தின் செயல்பாடு இறையாண்மை சாா்ந்தது என்ற வரம்பில் வராது, மாறாக வணிக நோக்கிலான செயல்பாடுதான். ஆகவே, வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாதுகாப்புக் குறைபாட்டுடன் சாலைப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்துடன் நெடுஞ்சாலை ஆணையமும் சோ்ந்து பொறுப்பேற்க வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட இளங்கோவன், அவரது மனைவிக்கு ஏற்பட்ட காயங்கள், மருத்துவச் செலவு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1,25,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும், மேலும் இனிவரும் காலங்களில் சாலைப் பணியின் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.