மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசுப்பேருந்து ஜப்தி
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.
திருச்சி காட்டூா் எல்லைக்குடி கைலாஷ்நகா் அண்ணா சாலையை சோ்ந்தவா் யோகேஸ்வரன் மகள் சினேகா (17), மகன் லிங்கேஸ்வரன். கடந்த 23.3.2019 அன்று யோகேஸ்வரன் தனது மகள் மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சென்றாா். அப்போது, அரசுப் பேருந்து மோதியதில் சினேகா மருத்துவமனையில் உயிரிழந்தாா். யோகேஸ்வரன், மகன் லிங்கேஸ்வரன் ஆகியோா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, திருச்சி மாவட்ட சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். கடந்த 10.2.2023-இல் இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பில், சிறுமி சினேகா குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் ரூ. 13 லட்சத்து 9 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டாா்.
ஆனால் இழப்பீடு தராமல் காலம் தாழ்த்தியதால், யோகேஸ்வரன், மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.