விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்காணித்தபோது, சந்தேகத்துக்கிடமாக வந்த 6 பேரைப் பிடித்து தீவிர சோதனை நடத்தினா்.
அப்போது அவா்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கப்பசை இருந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சா்வதேச மதிப்பு ரூ. 2.8 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.