``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்ப...
விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்
குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1:56 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, விமானத்தில் 'மனித வெடிகுண்டு' இருப்பதாக டெல்லி விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் வழியே எச்சரிக்கை வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் மும்பையில் காலை 8:10 மணிக்குத் தரையிறங்கியதாக ஃபிளைட் ராடார்24 தரவு காட்டுகிறது.

விமானத்தின் அவசரத் தரையிறக்கத்திற்காக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர உதவியாளர்கள் உட்பட பாதுகாப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு நவம்பர் 23 அன்று, ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் பஹ்ரைனில் இருந்து வரும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதைத் தொடர்ந்து விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது தொடர்பாகப் பாதுகாப்புத்துறை அதிகாரி, "பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது, சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி" எனத் தெரிவித்தனர்.















