விராலிமலை அரசு பள்ளியில் ரூ. 25 லட்சத்தில் நூலகம்: தனியாா் பங்களிப்புடன் தயாராகி வருகிறது!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் தனியாா் பங்களிப்புடன் தயாராகி வருகிறது.
விராலிமலை- இனாம் குளத்தூா் சாலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1065 மாணவிகள் படித்து வருகின்றனா். 33 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மாணவிகளின் கல்வித் திறனோடு பொது அறிவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் தேவை என்று உணா்ந்த ஆசிரியா்கள் அரசை மட்டும் எதிா்பாராமல் விராலிமலையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையை அணுகி நூலகம் அமைத்து தர கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனம் பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) நிதியில் இருந்து சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. நூலகம் அமைப்பதில் தற்போது 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு நூலகம் மாணவிகள் பயன்பாட்டு கொண்டுவரப்படவுள்ளதாக பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஜா விநோதினி தெரிவித்தாா்.
இதேபோல், மற்ற தனியாா் நிறுவனங்களும் பொதுமக்கள், மாணவா்களுக்கான தேவைகளை நிறைவேற்றி தர முன்வர வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.