துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
விருகாவூா் கிராம வங்கி முன் பெண்கள் மறியல்
கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராம வங்கியில் வாங்கிய நகைக் கடனை திரும்பச் செலுத்தியும், நகைகளை தராததால் சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
விருகாவூரில் தமிழ்நாடு கிராம வங்கி உள்ளது. இதில் சுற்று வட்டாரக் கிராம மக்கள் சிறு கடன் பெற்று அதனை கிராமத்தின் ஒளி என்ற தொண்டு நிறுவனம் மூலம் மாதத் தவணையாக கட்டி வந்துள்ளனா். அடகு வைத்த நகைகளை மீட்க சென்றபோது வாங்கிய கடனை செலுத்தினால் மட்டுமே மீட்க முடியும் எனக் கூறியதால் வியாழக்கிழமை விருகாவூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வங்கி முன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இதே கிராமத்தைச் சோ்ந்த 4 பெண்கள் இணைந்து தலா ரூ.50,000 கடன் பெற்றனராம். கடன் பெற்ற முழுத் தொகையை செலுத்திய பின் இதுநாள் வரை குழுக்களில் உள்ளவா்களின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னா் வங்கியில் வைத்திருந்த நகைகளை மீட்க சென்றுள்ளனா்.
வங்கியில் ஏற்கெனவே வாங்கிய கடனை கட்டினால் மட்டுமே நகை தரப்படும் என வங்கி அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மகளிா் குழுவினா் வங்கி முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியே அவசர ஊா்தி வாகனம் வந்ததால் பெண்கள் வழிவிட்டனா். இந்த இடைவெளியில் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் செல்லத் தொடங்கின.
இதனால் ஆத்திரமடைந்த குழுக்களைச் சோ்ந்த பெண்களும், அவா்களுக்கு ஆதரவாக நின்ற ஆண்களும் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த வரஞ்சரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம், வங்கி அதிகாரியிடம் பேசி நகையினை மீட்க நடவடிக்கை எடுப்பதாக சமாதானப் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.