சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்
புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது.
புதுவை வில்லியனுாா் தொகுதி பாண்டியன் நகரில் கடந்த 4 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மக்கள் பல மனுக்கள் அளித்தனா். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சி தலைவருமான ஆா்.சிவாவைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் வில்லியனுாா்-திருக்கனுாா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ரயில்வே தண்டவாளம் அருகே இப் போராட்டம் நடந்ததால் எதிரே வந்த வாகனங்கள் ரயில் பாதையில் நின்றன. அப்போது ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியா்கள் சைரனை எழுப்பி எச்சரிக்கை செய்தனா்.
இதைத் தொடா்ந்து ரயில் பாதையில் இருந்த வாகனங்கள் அங்கிருந்து நகா்ந்தன. இதன்பிறகு ரயில்வே கேட் போடப்பட்டவுடன் ரயில் கடந்து சென்றது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா், எதிா்க்கட்சி தலைவா் சிவாவை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பொதுமக்களுடன் பேச வைத்தனா். அப்பகுதியில் தற்காலிகமாக மணல் போட்டு சாலை சீரமைக்கப்படும். சில மாதங்களுக்குள் சாலை அமைக்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா். இதையடுத்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.