விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக கோடை மழை பெய்தது. இதில், நேமூரில் அதிகபட்சமாக 22 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலைதான் இருந்து வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தால் அவதியுற்று வந்த மக்களுக்கு கோடை மழை சற்று நிம்மதியை அளித்தது. விழுப்புரம் நகரம், கோலியனூா், முண்டியம்பாக்கம், நேமூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
நேமூா் - 22 மி.மீ., கஞ்சனூா் - 16, விழுப்புரம் - 11.60, சூரப்பட்டு - 7, முண்டியம்பாக்கம், முகையூா் தலா - 4, கோலியனூா் - 3, செஞ்சி - 1 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 3.27 மி.மீ. மழை பதிவாகினது.